கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆல்பன் ராய்(10), சாம் கேர்சன்(9), இமானுவேல். இவர்கள் மூவரும் நண்பர்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இந்த மூன்று சிறுவர்களும் கீழ ஆசாரிப்பள்ளம் தாமரை குளத்தில் மீன்பிடிக்க சிறிய வலையுடன் சென்றுள்ளனர். குளத்தில் இறங்கி மீன்பிடிக்க சிறு வலையுடன் சிறுவர்களான ஆல்பன் ராய் மற்றும் சாம் கேர்சன் ஆகியோர் குளத்தில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாதது என்பதால் இருவரும் தண்ணீரில் தத்தளித்தபடி நீரில் மூழ்கினர். இதைக் கண்ட இமானுவேல் கூச்சலிட்டு அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளான்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர் குளத்தில் இறங்கி தேடினர். குளத்தின் அடிப்பகுதியில் சேற்றில் சிக்கி இருந்த இரண்டு சிறுவர்களின் உடல்களை மட்டுமே மீட்கமுடிந்தது. சிறுவர்களின் உடலைப்பர்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அங்கு சென்று இரண்டு சிறுவர்களின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மீன் பிடிக்க வலைவிரித்த சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியது.