பெங்களூரு: கோயிலுக்கு செல்லும் சாலையில் ஆணிகளை வீசியதாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் உள்ள தத்த பீட கோயிலில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு வந்த வாகனங்கள் அதிகளவில் பஞ்சர் ஆனதாக கோயில் நிர்வாகத்துக்கு புகார் வந்தது. தத்தபீட பிரதான சாலையில் கோயில் நிர்வாகிகள் ஏராளமான ஆணிகளை கண்டெடுத்தனர்.
தத்தபீட பிரதான சாலையோரம் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, 2 பேர் இரவு நேரத்தில் சாலையில் ஆணிகளை வீசியது தெரியவந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் சிக்கமகளூரு போலீஸில் புகார் அளித்தனர்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் முகமது ஷபாஸ் (23), வாஹித் உசேன் (21) ஆகிய 2 இளைஞர்கள் ஆணிகளை வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை சிக்கமகளூரு போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்தனர். அப்போது இருவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கோயில் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு தொந்தரவு தரும் நோக்கில் இவர்கள் சாலையில் ஆணிகளை வீசியுள்ளனர்.