மதுரை : ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரி விழா கமிட்டியினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஜனவரி 15,16,17 தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. எனவே, ஒவ்வொரு ஊரின் சார்பில் விழாவை நடத்த மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி மனு அளித்தனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர். ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியா புரம் ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
இதில் தை முதல்நாளில் நடைபெறுவது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. கடந்த சில ஆண்டுகளாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் கிராம கமிட்டியினர் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால் கடந்த 3 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் அரசே நடத்தி வந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். மனு இந்தநிலையில் வருகிற 2023-ம் ஆண்டில் அவனியாபுரத்தில் ஜனவரி மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை அவனியாபுரம் தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் மற்றும் பிரதான ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தினர் நடத்த அனுமதி அளிக்கக்கோரி சங்க தலைவர் கண்ணன் தலைமையில் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது அரசின் வழிகாட்டுதலோடு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து அமைதியான முறையில் நடத்த அவனியாபுரம் தென்கால் கண்மாய் பாசன விவசாயிகள் மற்றும் பிரதான ஜல்லிக்கட்டு நலச் சங்கத்திற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.பின்னர் இதுதொடர்பான மனுவினை மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்டோரிடமும் வழங்கினர்.