மத்திய அரசால் தேசிய அளவில் தயார் செய்யப்பட்ட புதிய கல்விக் கொள்கை கடந்த 2020ல் இறுதி செய்யப்பட்டு அமலுக்கு வந்தது. இருப்பினும் நாடு முழுவதும் மத்திய அரசால் கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. தமிழகத்தை ஆளும் திமுக அரசு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அரசியல் ரீதியில் எதிர்த்து வருகிறது.
இதன் காரணமாக தேசிய கல்விக் கொள்கைக்கு இணையான மாநில அளவில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு குழுவின் வரைவு அறிக்கை அடுத்த மாதம் வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை சார் நிபுணர்களின் கருத்து கேட்ட பிறகு இறுதி அறிக்கை தயாராகும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.