திருப்பதி : திருப்பதி மாநகராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என கமிஷனர் அனுபமா அஞ்சலி அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பதி மாநகராட்சி 34வது வார்டு பகுதியில் கமிஷனர் அனுபமா அஞ்சலி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பவானி நகர், தேவேந்திரா தியேட்டர் ரோடு சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து, உரிய அறிவுரைகள் வழங்கினார்.
சில பகுதிகளில் பிரதான கால்வாய் ஆக்கிரமிப்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதை உணர்ந்து, ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற, திட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதேபோல் வீடு வீடாக குப்பைகளை எடுத்துச் செல்லும் ஊழியர்களிடம், டிராக்டர்கள் மூலம் குப்பைகளை கொண்டு செல்லும் தொழிலாளர்களிடம், ஈரம் மற்றும் உலர் குப்பை என பிரித்தால் மட்டுமே குப்பைகளை பொதுமக்களிடமிருந்து பெற வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் குப்பை சேகரிக்க வேண்டும். குப்பை சேகரிக்க வந்திருப்பதாகவும், ஒவ்வொரு வீட்டிற்கும் தெரிவிக்க வேண்டும்.
தூய்மை இந்தியா திட்டத்தில் ஒரு பகுதியாக குப்பைகளை கொட்ட வரும் பொதுமக்கள் மற்றும் சாலையோரம் உள்ள கடைக்காரர்களிடம் ஈர மற்றும் உலர் குப்பைகளை தனித்தனியாக வழங்க வேண்டும் என கமிஷனர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ஹரிகிருஷ்ணா, டி.இ.கோமதி, துப்புரவு மேற்பார்வையாளர் செஞ்சையா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.