திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனம் பூசும் பணி; 15 நாள்களில் சுற்றுலா பயணிகள் அனுமதி!

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்றைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. கடலின் நடுவே அமைந்துள்ளதால் கடல் காற்று, மழை, வெயில் போன்றவைகளால் திருவக்குவர் சிலை பாதிக்கப்படும்.

எனவே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவள்ளுவர் சிலை சுத்தம் செய்யப்பட்டு ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட பிறகு ஐந்தாவது முறையாக ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த பணி சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சிலையைச் சுற்றி பெரிய இரும்பு பைப்புகள் மூலம் சாரங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் தண்ணீர் மூலம் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள்

அதைத்தொடர்ந்து சிலையின் இணைப்புகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை அடைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை சேர்ந்த கலவை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பூசப்பட்டது. அடுத்தகட்டமாக சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் விதமாக சிலை மீது காகித கூழ் ஒட்டும் பணிகள் தொடங்கியது. அந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. திருவள்ளுவர் சிலை மீது ரசாயனம் பூசும் பணிகள் நடைபெற்றுவருவதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைமீது ரசாயனம் பூசும் பணிகளை மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சரஸ்வதி, தமிழக தொல்லியல் துறையின் ஆணையர் சிவானந்தம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுச் மேலாளர் பாரதி தேவி ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

பராமரிப்பு பணிகள்

சிலையில் உள்ள உப்புகள் முழுவதும் நீக்கப்பட்டுவிட்டதாகவும். இன்று முதல் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனபடும் ரசாயனம் திருவள்ளுவர் சிலை முழுவதும் பூசப்பட உள்ளதாகவும் நிபுணர்குழுவினர் தெரிவித்தனர். ரசாயனம் பூசும் பணிகள் 15 நாட்களுக்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும் எனவும், அதன் பின்னர் திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.