எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதிலிருந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளான ஊழியர்களின் பணி நீக்கம், ப்ளூ டிக் விவகாரம், போலி கணக்குகளின் தடை போன்றவை பேசுப்பொருளாக மாறி சர்ச்சையைக் கிளப்பின.

இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சி.என்.என், தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ், தி இண்டிபெண்டன்ட் உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை எலான் மஸ்க் முடக்கியதால் பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பின. ட்விட்டர் நிறுவனத்தின் இது போன்ற செயல்பாடுகள் மன உளைச்சலை தருவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர், தனது டெஸ்லா நிறுவனத்தின் 3.58 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 29,500 கோடி ரூபாய்) பங்குகளை விற்றது போன்றவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எலான் மஸ்கின் இதுபோன்ற செயல்களால் அவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.
Should I step down as head of Twitter? I will abide by the results of this poll.
— Elon Musk (@elonmusk) December 18, 2022
இத்தகைய சூழலில், எலான் மஸ்க் தற்போது ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? உங்கள் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்” என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்கின் இந்த கேள்விக்கு 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்றும், சுமார் 42.5 சதவிகிதம் பேர் ‘இல்லை’ என்றும் பதிலளித்துள்ளனர்.