திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் பாஜ நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து அங்கு இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. திருக்கழுக்குன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கஞ்சா புகைத்து கொண்டிருந்தவரிடம் கஞ்சாவை எங்கு வாங்கினாய் என மாநில பாஜ நிர்வாகி தனசேகரன் (46) கேட்டிருக்கிறார். அந்த வாலிபர், ஒரு இஸ்லாமியரின் பெயரை குறிப்பிட்டு, அவரிடம் வாங்கியதாக கூறியுள்ளார். இதை வீடியோவாக பதிவு செய்து, பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் தனசேகரன் செய்தி வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தனசேகரன்மீது நடவடிக்கை எடுக்க கோரி, கடந்த 2 நாட்களுக்கு முன் திருக்கழுக்குன்றம் போலீசில் ஒருசில இஸ்லாமியர்கள் புகார் அளித்தனர். இதற்கிடையே, நேற்று மாலை மாநில பாஜ நிர்வாகி தனசேகரன் காரில் வெளியே சென்றுள்ளார்.
கானகோயில் பேட்டை பகுதியில் ஒரு மர்ம கும்பல் அவரது காரை வழிமறித்தது. தப்பி செல்ல முயன்ற தனசேகரனை மர்ம கும்பல் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் தனசேகரன் படுகாயம் அடைந்தார். அவரை திருக்கழுக்குன்றம் போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தனசேகரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, தனசேகரனின் குடும்பத்துக்கு அண்ணாமலை ஆறுதல் கூறினார். பின்னர் அண்ணாமலை கூறுகையில், மாநில பாஜ நிர்வாகி தனசேகரன்மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இன்று (19ம் தேதி) காலை 6 மணி முதல் திருக்கழுக்குன்றம் பகுதியில் பாஜ சார்பில் முழு கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
இதன்படி, திருக்கழுக்குன்றத்தில் இன்று காலை முதல் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம், மேட்டு தெரு, மாமல்லபுரம் சாலை, அடிவார வீதி, சன்னதி தெரு, சதுரங்கப்பட்டினம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், திருக்கழுக்குன்றம் பகுதியில் இச்சம்பவத்தை தொடர்ந்து மேலும் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க, செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் உத்தரவின்பேரில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த அகமது பாட்சா (33), மன்சூர் அலி (32), சையது அப்துல் ரகுமான் (33), இப்ராகிம் (35) ஆகிய 4 பேர் இன்று காலை சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பலரை வலைவீசி தேடி வருகின்றனர்.