திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட கருத்தரங்கம், அஞ்சலி ரவுண்டானா பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரன், தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஜோதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் பேசிய நீதிபதி என்.கிருபாகரன், போலி சட்டக் கல்லூரிகள் ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், சிக்கிம் என நாடு முழுவதும் பரவியுள்ளன. கடந்த 2011-இல் 800 சட்டக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அப்போதே 175 சட்டக் கல்லூரிகளே போதுமானது எனக் கூறப்பட்டது. ஆனால் ஆண்டுக்கு 500 கல்லூரிகள் என வளர்ந்து தற்போது 1,715 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் இருந்து ஒராண்டுக்கு 1 லட்சம் பேர் வெளியே வருகின்றனர்.
உயர் நீதிமன்றத்தில், ஊர் தலைவர் ஒருவரின் வழக்கறிஞர் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது, அந்த ஊர் தலைவரிடம், `வழக்கறிஞராக எந்தக் கல்லூரியில் படித்தீர்கள்? என்னென்ன பாடங்கள் படித்தீர்கள்?’ எனக் கேட்டேன். அவரால் எந்தப் பாடம் என்பதைக் கூட சொல்ல முடியவில்லை. பார் கவுன்சில் படிவங்களை கூட பூர்த்தி செய்யத் தெரியாதவர்கள் இருப்பதாக தகவல் வந்தது.

கடந்த 2009-ல் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்யக் கூடாது என வயதுவரம்பு தொடர்பாக தீர்ப்பளித்தேன். ஆனால் அந்த உத்தரவு பின்பற்றப்பட்டிருந்தால் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குமஸ்தாக்கள், டாஸ்மாக்கில் வேலை செய்வோர்கள் போலி வழக்கறிஞர்களாக மாறியிருக்க மாட்டார்கள். இவர்கள் தான் இன்று முறையாக கல்லூரிகளில் சட்டம் படித்து பயிற்சி பெற்று வழக்கறிஞர்களாக தொழில் செய்வோருக்கு போட்டியாகவும் இடையூறாகவும் உள்ளனர்.
நாட்டில் 4 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. அதில் 80 சதவிகிதம் வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தான் உள்ளன. போலி வழக்கறிஞர்கள் அதிகமாகிவிட்டது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. முறையாக சட்டம் படிக்காத போலி வழக்கறிஞர்கள் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். என்ஜினீயர், மருத்துவ படிப்புகள் தரம் உயர்ந்துவிட்டன. ஆனால் வழக்கறிஞர் படிப்பு பின்னோக்கி செல்கிறது.

மெடிக்கல் கவுன்சில் மருத்துவ மாணவர்களின் விவரங்களை அதன் இணைய பக்கத்தில் பதிவேற்றுகிறது. அதேபோல வழக்கறிஞர்கள் விவரங்களை பார் கவுன்சில் தனது இணைய பக்கத்தில் வெளியிட வேண்டும். அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணி ஓய்வு பெற்றுவிட்டு வழக்கறிஞர்களாக ஆனவர்களால் தான் வழக்கறிஞர் தொழிலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

முழுநேரமாக படித்து முறையாக பயிற்சியுடன் 300, 400 ரூபாய்க்காக உழைக்கும் 10 வழக்கறிஞர்களின் தொழிலை ஒரு ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் வழக்கறிஞராகி கெடுக்கிறார். டாஸ்மாக்க்கில் வேலை செய்து கொண்டு பகுதி நேரமாக வழக்கறிஞர் தொழில் செய்கிறேன் என்பவர்களும், தங்களை தற்காத்து கொள்ள போலி வழக்கறிஞர்களாக மாறுபவர்கள் என சென்றால் பிற்காலத்தில் நீதிபதிகளே கூட குற்றவாளிகளாக இருக்க வாய்ப்பு உள்ளது.

போலி கல்லூரிகளில் படித்து போலி ஆவணங்களை வைத்து கொண்டு போலி வழக்கறிஞர்களாக பதிவு செய்வோர், ஒரு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வழக்கறிஞர்களாக பதிவு செய்வோரைத் தடுக்கவும், களையெடுக்கவும் பார் கவுன்சில் முன்வர வேண்டும். நீதித்துறையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்றால் சட்டம் போலிகளின் கைகளில் மாட்டிக்கொள்ளக் கூடாது” என்றார்.