சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும்250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை சார்பில் இன்று கடலுக்கு சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த மூன்று தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்றும் நாளையும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.