நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானைகள் தாக்கி கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 18 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மனிதர்களை வனவிலங்குகள் தாக்குவது தொடர்ந்து கொண்டிருக்க மறுபுறம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இதுவரை ஒருவருக்கு கூட உறுதியளித்தபடி அரசுவேலை வழங்கவில்லை என்கின்றனர் ஓவேலி மக்கள். பச்சைபசேலென அழகு பொதிந்த மலைகளுக்கு நடுவே உள்ளது கூடலூர் மாவட்டம். பழங்குடியினர், மலையாள மக்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றாக வசிக்கும் இங்கு முதல் பேரூராட்சியாக தொடக்கப்பட்டதுதான் ஓவேலி. முக்குருத்தி தேசிய பூங்காவிலிருந்து உருவாகும் அருவி முதலாவதாக மனிதர்கள் வாழும் பகுதியாக இந்த இடம் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருநகரமாக திகழ்ந்த இந்த ஓவேலி தற்போது பராமரிப்பின்றி அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக காட்சியளிக்கிறது. வன விலங்குகளின் கூடாரமாகவும் ஓவேலிப்பகுதி உருவெடுத்துள்ளது. அங்கிருந்த 4 தனியார் தேயிலைத்தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் அங்கு வசித்த மக்களும் வாழ்வாதாரத்திற்காக வெளியூருக்கு புலம்பெயர்ந்துள்ளனர். எஞ்சியுள்ள மக்கள் அங்கேயே தொழில் புரிந்து வரும் நிலையில் உணவுத்தேடி ஊருக்குள் நுழையும் யானைகள் தாக்கி உயிரிழக்கின்றனர்.
இதுவரை அங்கு 18 பேர் உயிரிழந்து இருப்பதாகவும். அரசு சார்பில் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் உறுதியளித்த அரசு வேலை கிடைக்கவில்லை எனவும் பாதிக்கபட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒவொருமுறையும் யானை தாக்கி உயிரிழப்பு ஏற்படும் போது மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கூடலூர் பகுதியில் யானைதாக்கி இறந்தவர்களின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 500பேர் மீது வழக்கும் பதியப்பட்டது என கவலை தெரிவிக்கும் மக்கள் தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சனைக்கு தீர்வுகண்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.