சென்னை குடிநீர் வாரியத்தின் இரண்டாம் அரையாண்டு வரியாக 475 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனை வசூலிக்க சென்னை குடிநீர் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் உள்ள நிறுவனங்கள் மீது ஜப்தி மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள 2 துணை ஆட்சிகள் மற்றும் 6 தாசில்தார்களை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.
சென்னையில் மட்டும் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. வாரியத்தின் வருவாய் ஆண்டுக்கு 950 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோரிடமிருந்து ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை குடிநீர் வாரியத்தின் கடும் நடவடிக்கையால் முதல் அரையாண்டில் 480 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. அதேபோன்று இரண்டாம் அரையாண்டிலும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
நோட்டீஸ் வழங்கி மூன்று நாள் கால அவகாசத்தில் வரி செலுத்தாவிட்டால் சென்னை குடிநீர் வாரிய சட்டப்பிரிவு 73ன் படி ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டு வரிக்கு இணையான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் காவல்துறை பாதுகாப்புடன் பறிமுதல் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.