தளபதி விஜய்யின் ‘வாரிசு‘ படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த காத்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பலரது ப்ளேலிஸ்டில் இந்த இரண்டு பாடல்களும் முதல் இடத்தை பிடித்துள்ளது. வரும் டிசம்பர் 24ம் தேதியன்று மாலை 6 மணியளவில் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை திரையில் கண்டு மகிழ ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது வாரிசு படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு டைட்டில் வின்னரான ராஜு ஜெயமோகன் ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க உள்ளார். இந்த செய்தியினை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியை ராஜு தொகுத்து வழங்கும் செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளது. ராஜுவின் நகைச்சுவை திறமையை பிக்பாஸில் கண்டு வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்த அனைவரும் ராஜு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபோவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள், அனைத்து படக்குழுவினர் மற்றும் உச்ச நட்சத்திரங்கள் சிலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கவுள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ள ‘வாரிசு’ படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்க, படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார், மேலும் இந்த படத்தில் பிரபு, சரத்குமார், குஷ்பூ, மீனாம் ஜெயசுதா போன்ற பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாக உள்ளது.