பெஷாவர் : பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த போலீசாரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
நம் அண்டை நாடான, பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பண்ணு மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏற்கனவே கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த தலிபான் பயங்கரவாதிகளிடம், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக, போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்த பயங்கரவாதி ஒருவன், அவர்களை நோக்கி சுட்டான். இதில், இரண்டு போலீசார் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அந்த பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த தலிபான் அமைப்பினர், அங்கிருந்த சிலரை விடுவித்ததுடன், போலீஸ்காரர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
அங்கிருந்து பாதுகாப்பாக ஆப்கானிஸ்தான் தப்பிச் செல்ல, ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தரும்படி பாகிஸ்தான்அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
பதற்றமான சூழல் நிலவுவதால், பாகிஸ்தான் ராணுவத்தினர் சம்பவ இடத்தைச் சுற்றி குவிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, தலிபான் தரப்பில் வெளியிடப்பட்ட ‘வீடியோ’வில், ஒன்பது போலீசார் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement