62 கிலோ எடைகொண்ட சேனைக்கிழங்கு – உலகசாதனை படைத்த விவசாயி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே வேர்கிளம்பி கல்லங்குழி என்ற பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவர் திருவட்டார் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம் இருந்ததினால், தன்னுடைய தோட்டத்தில் சேனைக்கிழங்கு, கூவைக்கிழங்கு, சேம்பு, வாழை மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். 

இந்நிலையில், அவர் கடந்த ஆண்டு சேனைக்கிழங்கு பயிரிட ஆரம்பித்தார். தற்போது, அந்த சேனைக்கிழங்கு செடிகள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. அதன் படி, அறுவடை செய்ததில் நான்கு சேனைக்கிழங்குகள் மிக பிரமாண்டமாக பெரிய அளவில் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். 

உடனே அந்த கிழங்குகளை எடை போட்டபோது 61.700 கிலோ, 55.900 கிலோ, 37 கிலோ, 29 கிலோ எடை கொண்டவைகளாக இருந்தது. இதில் அதிகபட்ச எடை கொண்டது 61.700 கிலோ ஆகும். 

இதுகுறித்து வில்சன் தெரிவித்ததாவது, “நான் அரசு வேலையில் இருந்த போதே விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பேன். என்னுடைய வீட்டைச்சுற்றி தென்னை, வாழை, நல்லமிளகு, இஞ்சி, கூவைக்கிழங்கு, சீனிக்கிழங்கு போன்றவற்றை பயிரிட்டுள்ளேன். அதன் பின்னர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்று முழுநேர விவசாயி ஆக மாறிவிட்டேன். 

பொதுவாக சேனைக்கிழங்கு 5 முதல் 10 அல்லது 12 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதில், கடந்த ஆண்டு இந்திய சாதனைப்புத்தகத்தில் கேரளாவை சேர்ந்த ஒருவர் 56.100 கிலோ எடை கொண்ட சேனை கிழங்கை அறுவடை செய்த தகவல் வெளியானது. இதைப்பார்த்த நான் அந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டு சேனைக்கிழங்கு பயிரிட்டேன். 

இந்த சேனைக்கிழங்கு பொதுவாக பத்து மாதத்தில் விளையக்கூடிய பயிர். அதன்படி, இதனை பங்குனி மாதம் பயிர் செய்து கார்த்திகை மாதத்தில் அறுவடை செய்வார்கள். 

நான் என்னுடைய தோட்டப்பயிர்களுக்கு ரசாயன உரங்களை போடாமல், இலை, மாட்டுச்சாணி, ஆட்டுப்புழுக்கை, கோழிக்காரம் உள்ளிட்ட இயற்கையான உரங்களை மட்டுமே போடுவேன். மேலும் தண்ணீர் தவறாமல் பாய்ச்சுவேன். 

அதுமட்டுமல்லாமல், அருகில் குளம் இருப்பதால் என்னுடைய தோட்டம் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். இப்போது 61.700 எடையில் சேனைக்கிழங்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

வரும் ஆண்டில் 75 கிலோ எடை கொண்ட சேனை கிழங்கை விளைவிப்பேன்” என்று அவர் தெரிவித்தார். அதிக எடை கொண்ட இந்த சேனைக்கிழங்குகளை அப்பகுதியில் உள்ள மக்கள் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.