தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து அலங்கியம் வழியாக பழனி செல்லும் சாலையில் உள்ளது சீத்தக்காடு. இங்குள்ள அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் இப்பகுதியில் பழமையான சங்கிலி கருப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளதால் பக்தர்களின் வருகை இருக்கும். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கற்களால் ஆன பழமையான தடுப்பணை உள்ளதால் விவசாயிகளும் தொழிலாளர்களும் அதன் கரையில் நடந்து அக்கரைக்கு சென்று விவசாய பணிகளை கவனிப்பது வழக்கம். இந்நிலையில் அமராவதி அணையில் இருந்து தப்பி வந் 4 முதலைகள் இப்பகுதியில் நடமாடி வருகின்றன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 2 முதலைகளை வனத்துறையினர் பிடித்தனர். 2 முதலைகள் பிடிபடாமல் போக்குகாட்டி வந்தது.
இந்நிலையில் நேற்று தடுப்பணை நடுவே உள்ள பாறை மீது 10 அடி நீள முதலை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்களும், தொழிலாளர்களும், மீனவர்களும் ஆற்றைக் கடந்து செல்ல அச்சமடைந்து கரையிலேயே காத்திருந்தனர். அவர்களின் சத்தத்தை கேட்டு பாறையில் படுத்து இருந்த முதலை மீண்டும் தண்ணீருக்குள் மறைந்தது. முதலையை பிடித்துச் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.