அரசுப் பள்ளிகளுக்கு தேவை நிதி அல்ல நிதி மேலாண்மை – ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் குறித்து நாராயணன் திருப்பதி

சென்னை: அரசுப் பள்ளிகளுக்கு தேவை நிதி அல்ல நிதி மேலாண்மை என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் திட்டமாக ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: “அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நிதி உதவி வாரி வழங்குங்கள் என்ற முழக்கத்தோடு ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன்’ என்ற திட்டத்தை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கவும், அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளதோடு, இந்த ஃபவுண்டேசன் தலைவராக வேணு ஸ்ரீநிவாசன் அவர்களையும், தூதுவராக விஸ்வநாதன் ஆனந்த் அவர்களையும் நியமிக்கப்பட்டுள்ளதை பாராட்டி வரவேற்கிற அதை வேளையில், அரசு பள்ளிகளின் தரம் இதுநாள் வரை குறைந்ததற்கு காரணம் நிதி இல்லாமை அல்ல நிதி மேலாண்மை இல்லாமை தான் என்பதை முதல்வர் உணர வேண்டும்.

இப்போதுள்ள தரமற்ற கல்விக்கு காரணம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதிய சலுகைகள் இல்லாததால் மட்டுமல்ல, அவர்களுக்கான சலுகைகள் நிர்வாக சீர்கேடுகளால் மறுக்கப்பட்டதால்தான் என்பதை மறுக்க முடியுமா? தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைவிட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் பன்மடங்கு அளிக்கப்பட்டும் தரமான கல்வி மாணவ மாணவிகளுக்கு சென்றடையவில்லை என்பதை மறுக்க முடியுமா? இது நிதியினால் ஏற்பட்ட குறைவு அல்ல, மாநில ஆட்சியாளர்களின் நிதி சுரண்டலினால் ஏற்பட்ட தரக்குறைவு என்ற உண்மையை நாடறியும். அரசுப்பள்ளிகளின் கட்டமைப்புக்கு இதுநாள் வரை செலவிடப்பட்ட பல கோடிகளில் ஊழல் முறைகேடுகள் மூலம் ஊழல் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டது உண்ணையா இல்லையா?

ஊழல் இல்லாதிருந்தால், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்பட்டிருந்தால், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு பலமாகியிருக்குமா இல்லையா என்பதை மனசாட்சி உள்ள கல்வியாளர்கள் உணர்ந்தே உள்ளார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் வேலைக்கு பல லட்சங்கள் லஞ்சம் கொடுக்கப்படுகிறதா இல்லையா? பணியிட மாற்றங்களுக்கு லஞ்சம், அரசுப் பள்ளிகளில் கொள்முதல் செய்யப்படும் அனைத்து பொருட்களிலும் ஊழல், லஞ்சம் என முறைகேடுகள் தாண்டவமாடுகிறதா இல்லையா? கல்வித்துறையை ஊழல் துறையாக மாற்றி வருடங்கள் பல ஓடிவிட்டன. தமிழக அரசு பள்ளிகளுக்கு இன்றைய தேவை லஞ்ச ஊழலற்ற, முறைகேடுகளற்ற நிர்வாகம் தானேயன்றி நிதி மட்டுமல்ல.

கடந்த 30 வருடங்களில் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க திட்டமிட்ட ரீதியில் அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு காரணமாகி, கல்வியை வியாபாரமாக்கிய அத்துணை பெருமையும் தமிழக அரசியல்வாதிகளையும், அதற்கு துணை நின்ற அதிகாரிகளையுமே சாரும். முதல்வரின் இன்றைய அறிக்கையானது கவர்ச்சியாக இருந்தாலும், லஞ்ச, ஊழல், முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசின் நிதி மேலாண்மை முறையாக இருந்தால் மட்டுமே அரசு பள்ளிகள் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும். இல்லையேல், நிதி வந்து குவிந்தாலும் சீர்கெட்டு போயிருக்கும் அமைப்பில் உள்ள ஓட்டையின் மூலம் வெளியேறிக் கொண்டேயிருக்கும். சீர்கேட்டின் தன்மையை உணர்ந்து ஆவன செய்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலி அவர்கள்?” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.