புதுச்சேரி கல்வித்துறை, இராமேஸ்வரம் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அமைப்பு, மார்டின் ஃபவுன்டேஷன் மற்றும் ஸ்பேஸ் சோன் இந்தியா ஆகியவை இணைந்து நடத்திய கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான செயற்கைக்கோள் ஏவுகலத் திட்டம் 2023 தொடக்கவிழா கிழக்க கடற்கரை சாலை, கருவடிக்குப்பம் காமராசர் மணிமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “அப்துல் கலாம் அவர்களின் நினைவாக ஆயிரம் மாணவர்களின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியிருக்கிறார்கள். வருங்காலத்திற்கான ஒரு பெரிய திட்டத்தையும் தொடங்கி இருக்கிறார்கள். அதில் புதுச்சேரியில் இருந்து 50 மாணவ-மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். புதுச்சேரி அவர்களுக்கு அனைத்து வகையிலும் துணை நிற்கும். இந்தியாவிலேயே புதுச்சேரி சுகாதாரத்துறை முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது. காசநோய் இல்லாத பாரதம் திட்டத்தின்கீழ் வீடு வீடாக சென்று காசநோயை கண்டுபிடிப்பதற்காக எக்ஸ்-ரே படம் எடுக்கும் கருவியை சுகாதாரத்துறைக்கு கொடுத்திருக்கிறோம். நாட்டிலேயெ முதல் முறையாக புதுச்சேரியில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது.

2030-ல் காசநோய் இல்லாத உலகம் என்று உலக சுகாதார மையம் சொன்னதை 2025 க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்று பாரத பிரதமர் அறிவித்தார். ஆனால் புதுச்சேரியை 2023-24 லேயே காசநோயில்லாத புதுச்சேரியாக மாற்ற முடியும். அந்த வகையில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சுகாதாரத்துறை, கல்வித்துறை, உள்ளாட்சித்துறை எதுவாக இருந்தாலும் எல்லா வகையிலும் பாரத பிரதமர் கூறியது போல “பெஸ்ட் புதுச்சேரி“ “ஃபாஸ்ட் புதுச்சேரியாக முன்னேறி வருகிறது. இதற்கு முந்தைய காலங்களைவிட இன்றைய காலகட்டத்தில் மத்திய அரசும் சிறப்பாக துணை நிற்கிறது. மாநில அரசும் சிறப்பாக செயல்படுகிறது. அதனால் புதுச்சேரி மக்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.
யார் என்ன விமர்சனம் வைத்தாலும் மக்களுக்கான கோப்புகளை புறந்தள்ளியது கிடையாது. மக்களுக்கான கோப்புகள் எதுவாக இருந்தாலும் அதை புறந்தள்ளுவது கிடையாது. நான் துணைநிலை ஆளுநராக வரும்போது உதவி தொகை, மானியம் போன்ற கிடப்பில் கிடந்த கோப்புகளை ஒப்புதல் தந்திருக்கிறேன். 1,400 கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து புதுச்சேரிக்கு உதவியாக தருவதாக கூறியிருக்கிறார்கள். இவை எல்லாம் புதுச்சேரி மாநிலத்தை முன்னேற்றுவதற்காகத்தான்.

மத்திய அரசு எல்லாவிதத்திலும் உதவி செய்து கொண்டிருக்கிறது. துணைநிலை மாநிலங்களின் மாநாடு நடைபெற்றது. அதற்காக அதிகாரிகள் வந்திருந்தார்கள். அதில் புதுச்சேரியின் பல திட்டங்கள் பாராட்டப்பட்டு இருக்கிறது. ஆளுநர் அடக்கி ஆளுகிறார், அரசால் எதுவும் செய்ய முடியவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுவதுபோல் எதுவும் கிடையாது. முதல்வர் தனக்கு என்ன சிரமம் இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அதிகாரிகளால், சில காலதாமதம் ஆவதை முதல்வர் அப்படி குறிப்பிட்டிருக்கலாம். முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் அமர்ந்து எங்கே காலதாமதம் ஆகிறது என்பதை கண்டறிந்து சரி செய்யப்போகிறோம். என்னுடைய மனசாட்சிப்படி மக்களுக்கு சேவை செய்ய முடிகிறது. என்னிடம் வரும் கோப்புகளை கோப்புகளாக பார்ப்பதில்லை. மக்கள் நலன் சார்ந்த மக்களின் முகமாகத்தான் பார்க்கிறேன். அது பொங்கலுக்கு உதவிப் பொருட்களாக, அரசு பள்ளிகளுக்கு மானியமாக இருக்கட்டும். மக்களை பாதிக்கும் கோப்புகள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சில கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று முடிவு எடுத்தபோது, அது மக்களை பாதிக்கும் என்பதால் அதை தடுத்திருக்கிறோம்.
மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே உடனே உதவித்தொகை அறிவித்தோம். புயலை கூட புதுச்சேரி சிறப்பாக எதிர்கொண்டது. புதுச்சேரியில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநில அந்தஸ்து என்பது பற்றி நான் கருத்து கூற கூறவில்லை. முதலமைச்சர் அவருடைய ஆசையை வெளிப்படுத்தியிருக்கலாம். என்னை பொருத்தமட்டில் மாநில அந்தஸ்தில் என்னென்ன நல்லது நடக்குமோ அவை இப்போது நடந்து கொண்டிருக்கிறது. யாரையும் மன உளைச்சலில் வைக்க கூடாது என்பது எனது எண்ணம். முதலமைச்சர் கூறியிருப்பதை என்னவென்று கேட்டு சரிசெய்ய முயற்சிக்கிறேன். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல வெளியில் இருந்து யாரும் வந்து கொண்டாடுவதற்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்த கோப்பு எனக்கு வரவில்லை. ஆளுநரின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மக்களை பாதிக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தப்படாது. முதல்வரின் கருத்தும் அதுதான். அவர் மூன்று முறை முதலமைச்சராக இருந்து நான்காவது முறையாக முதலமைச்சராக இருப்பவர் . அதனால் மக்களை பாதிக்கும் செயல்களை செய்ய மாட்டார். ஆனால் இதற்கு எப்படி முடிவு எடுத்தார்கள் என்பதை அறிந்து சொல்கிறேன்.

துணைநிலை ஆளுநர் என்பதற்கு சில அதிகார பகிர்வுகள் இருக்கிறது. அதற்கென்று கொள்கை முறை வழிமுறைகள் இருக்கிறது. அதை திடீரென்று மாற்ற முடியாது. ஆனாலும் மற்ற ஆளுநர்களை போல அதிகாரத்தை நான் எப்போதும் பயன்படுத்தவில்லை. அன்பாகவும் மக்களுக்கு வேண்டியதைதான் செய்து கொண்டிருக்கிறேன். துணைநிலை ஆளுநர் என்றால் சில முடிவுகளை உள்துறையைக் கேட்டுதான் எடுக்க முடியும். அதில் மாற்றம் செய்ய முடியாது. துணைநிலை ஆளுநருக்கென்று இருக்கும் வரைமுறைகளை மீற முடியாது.
விரைவாக முடிவெடுப்பதற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய அரசு அதிகாரிகள் வருகிறார்கள். இது புதிய ஏற்பாடு. இதுவரை மூன்று முறை அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். மத்திய அரசு நமக்கு துணையாக இருக்கிறது என்பதற்கு இது ஆதாரம். அதனால் நல்லது நடந்து கொண்டிருக்கிறது புதுமையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வருக்கும் எனக்கும் இருப்பது, அண்ணன் தங்கச்சி, அக்கா தம்பிக்கு இடையில் இருக்கும் பிரச்னைதான். அதை தீர்த்து வைக்கும் மனநிலையும் திறமையும் எனக்கு இருக்கிறது” என்றார்.
சில தினங்களுக்கு முன்பு தன்னை சந்திக்க வந்த சமூக அமைப்பினரிடம், “மாநில அந்தஸ்து தரக் கோரி மத்திய அரசிடம் பலமுறை கேட்டோம். கிடைக்கவில்லை. நிர்வாகத்தில் இருக்கும் எங்களுக்குத்தான் சிரமங்கள் தெரியும். ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால், பல விஷயங்களைச் செய்ய முடியாத நிலை இருக்கிறது. அதிகமான மன உளைச்சல்தான் ஏற்படுகிறது” என்று முதல்வர் ரங்கசாமி விரக்தியாக பேசியிருந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது பேசி இருக்கிறார் ஆளுநர் தமிழிசை.