மயிலாடுதுறை மாவட்டத்தில் சொத்து பிரச்சனையில் வாலிபரை கட்டையால் அடித்து கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் முக்கூட்டு பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் இவரது மகன் ஓட்டுநர் திருவேங்கடநாதன்(24). இவர்களுக்கும் உறவினரான ஆக்கூர் வேளாண் திடல் பகுதியை சேர்ந்த கண்ணையன் என்பவரது குடும்பத்தினருக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று திருவங்கடநாதனுக்கும், கண்ணையா மகன் கலியபெருமாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அங்கிருந்து சென்ற நிலையில், கலியபெருமாள் சிவன் கோவில் தெருவை சேர்ந்த அருண் ஆகாஷ் மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகியோருடன் சென்று திருவேங்கடநாதனின் வழிமறைத்து சரமாரியாக உருட்டுக்கட்டையால் அடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த திருவேங்கட நாதனை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருவெங்கடநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கலியபெருமாள், அருண் ஆகாஷ் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.