சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வடபழனி முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற பொழுது சிறப்பு தரிசனத்திற்காக டிக்கெட் வாங்கியதில் முறைகேடாக வழங்கியதை தட்டி கேட்டதால் ஊழியர்கள் அநாகரிமாக நடந்து கொண்டு தாக்க முயன்றதாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் சுப்பிரமணியம் சென்னை வடபழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் நேற்று (டிச.19) சென்றுள்ளார். தன்னை நீதிபதி என வெளிப்படுத்தாமல் சாதாரண மக்களுக்காக வழங்கும் ரூ.50 சிறப்பு தரிசன டிக்கெட்டில் செல்ல விரும்பி உள்ளார். கோவில் டிக்கெட் கவுண்டரில் இருந்த அறநிலைத்துறை ஊழியர் 150 ரூபாய் பெற்றுக் கொண்டு இரண்டும் ரூ.50 டிக்கெட்களும், ஒரு ஐந்து ரூ.5 டிக்கெட் வழங்கியுள்ளார். இதைப் பற்றி கேட்டதற்கு அறநிலைத்துறை ஊழியர் அநாகரிகமாக நடந்து கொண்டார்.
இது போன்ற முறைகேடுகள் நடந்தால் பக்தர்கள் புகார் அளிக்க தொடர்பு எண் கொண்ட அறிவிப்பு பலகை இங்கே ஏன் இல்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு அறநிலைத்துறை ஊழியர் நீதிபதியையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டும் விதமாகவும், வாய்க்கு வந்த வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. அப்பொழுது “முதலமைச்சர் கூட தனது தொடர்பு எண்ணை மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது கோயில் நிர்வாக ஊழிய தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள மாட்டாரா” என நீதிபதியின் மனைவி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு “முதல்வர் பகிரலாம், ஆனால் கோவில் நிர்வாகி பகிர மாட்டார்” என அறநிலைத்துறை ஊழியர் பதிலளித்துள்ளார். இதனால் நீதிபதியும் அவரது குடும்பத்தாரையும் கோவிலுக்குள் அனுமதிக்காமல் அறநிலையத்துறை ஊழியர்கள் தடுத்துள்ளனர். இதைப் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீதிபதியை அடையாளம் கண்டுள்ளனர். காவல்துறையினர் வந்து அடையாளம் காணாவிட்டால் மற்றவர்களைப் போலவே தங்களையும் வெளியே தள்ளி இருப்பார்கள் என நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நீதிபதி எம்.எஸ் சுப்பிரமணியம் கூறுகையில் “இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலைத்துறை ஆணையரே தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இதனால் நான் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து ஜனவரி 2வது வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மாநில அரசு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் வடபழனி தண்டாயுதபாணி கோயிலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.