ஒடுகத்தூர் அருகே அனுமதியின்றி நிலத்தில் பம்புசெட்டில் பதுக்கிய 2180 ஜெலட்டின் குச்சிகள், 1130 டெட்டனேட்டர்கள் பறிமுதல்

ஒடுகத்தூர் : வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மடையாப்பட்டு பகுதியில் சட்ட விரோதமாக வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று மாலை வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் உலகநாதன்,   சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், தனிப்பிரிவு எஸ்ஐகோவிந்தசாமி மற்றும் போலீசார் அப்பகுதியில் மாலை 6.30 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மீண்டும் போலீசாருக்கு குறிப்பிட்ட விவசாய நிலத்தில் உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உடனே விரைந்து சென்ற போலீசார் அதேபகுதியை சேர்ந்த பாண்டு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பம்பு செட்டில் சோதனை செய்து வெடி பொருட்களை கண்டெடுத்தனர்.

இதையடுத்து, நிலத்தின் உரிமையாளரிடம் விசாரித்தபோது தனக்கு சொந்தமான நிலத்தினை சுரேஷ் என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர், சுரேஷ்(32) என்பவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் நிலத்தில் உள்ள பம்பு செட்டில் 2180 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 1130 டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சுரேசையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்  கே.விகுப்பம் அடுத்த அர்ஜுனாபுரம் பகுதியில் உள்ள ஒரு நபரிடம் ஜெலட்டின் குச்சிகளையும், டெட்டனேட்டர்களையும் வாங்கியது தெரியவந்தது.

மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்களை வைத்திருந்த வழக்கில் இவர் சிக்கியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். தற்போது இந்த வெடி பொருட்கள் எதற்காக வாங்கினார்? யாரிடம் வாங்கினார்? என்ன சதித்திட்டம் தீட்டி உள்ளார்? என்று போலீசார் பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்களை விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடுகத்தூரில் இதுவே முதல் முறை

ஒடுகத்தூர் அடுத்தமடையாப்பட்டு பகுதியில் நேற்று வேப்பங்குப்பம் போலீசார் நடத்திய சோதனையில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 2180 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 1130 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், ஒடுகத்தூர் பகுதியில் இதுபோன்று அதிகளவில் வெடி பொருட்கள் சிக்கியது இதுவே முதல் முறை என்று போலீசார் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.