தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி – இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் வெங்கடசாமி நாயுடு கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் உள்ளது. இவ்வழியே சென்றால் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி மாவட்டம் புளியங்குடி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, குற்றாலம் ஆகிய ஊர்களுக்குச் செல்லலாம். இந்த நிலையில், நேற்று மாலையில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன்தேவர்குளத்திற்கு தனியார் பேருந்து ஒன்று கிளம்பிச் சென்றுள்ளது. சிவகாசி அருகேயுள்ள செவல்பட்டி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் கோவில்பட்டி நோக்கி ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர்.

இளயரசனேந்தல் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரில் அஜய், கீர்த்திக்,செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ், பேருந்தில் பயணித்த கூலித் தொழிலாளி மாடசாமி உள்ளிட்ட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் உயிரிழந்தவர்களின் உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ”அந்த கார் வேகமாக வந்துச்சு. அவங்களோட கார் வந்த வேகத்துல பஸ்ஸுல நேருக்கு நேரா மோதி ரெண்டு தடவை உருண்டு விழுந்துச்சு. இந்த விபத்துல எங்க பஸ்ஸுல வந்த ஒருத்தருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுச்சு.

குறைவான வேகத்துல வந்து மோதியிருந்தாக்கூட காயத்தோட உயிர் பிழைச்சிருப்பாங்க. அதிவேகத்துல வந்து மோதுனதுனால இப்போ மூணு உயிரு போயிடுச்சே” எனப் புலம்பினர் பேருந்தில் பயணித்தவர்கள். போலீஸாரிடம் பேசினோம், “கார் ஓட்டிட்டு வந்த கீர்த்திக்தான் வேகமா ஓட்டியிருக்கார். கார் வந்த வேகத்தை பார்த்துட்டுதான் பஸ்ஸை சாலை ஓராமாவே டிரைவர் ஓட்டிட்டு வந்திருக்கார். கார் மோதினதுல பஸ்ஸோட வலது பகுதி சேதமாயிடுச்சு. விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.