சபரிமலை: இந்த ஆண்டு பூஜைக்கால நடைதிறப்பின் போது மட்டும் '24 பக்தர்கள்' மரணம்!

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தில் நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை 24 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கால சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சபரிமலை சிறப்பு அதிகாரி பி.விஷ்ணுராஜ் ஐஏஎஸ் தலைமையில் சபரிமலை சன்னிதானத்தில் ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் சபரிமலை தனி அலுவலர் ஆனந்த், தேவஸ்வம் செயல் அலுவலர்  கிருஷ்ணகுமார், RAF துணை கமாண்டன்ட் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களுடன் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தின் இறுதியில் சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தில் நடை திறக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை 24 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலானோரின் மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணமாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.

image
இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க நோய்வாய்ப்பட்ட பக்தர்கள் தவறாமல் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை மறக்காமல் கொண்டு வரவும்,  உரிய நேரத்தில் அவற்றை  பயன்படுத்தவும் வேண்டும். மருந்து மாத்திரைகளை பக்தர்கள் பயன்படுத்துவதை அவர்களுக்கு  நினைவூட்டும் வகையில் பல்வேறு இடங்களில் மைக் மூலம் அறிவிப்புகள் செய்யவும் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தரிசனத்திற்காக வரும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வெடுக்க மரக்கூட்டம் முதல் சரங்கொத்தி வரை 24 கியூ காம்ப்ளக்ஸ்கள் உள்ளன. அங்கு பக்தர்கள் ஓய்வெடுக்கவும், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. க்யூ காம்ப்ளக்ஸ்களின் பயன்பாட்டை பக்தர்கள் புரிந்துகொள்ளும் பல்வேறு மொழிகளில்  மொழிகளில் அறிவிப்பு செய்யப்படும்.

image
தற்போது பெரிய நடைபாதையில் பெண்கள், குழந்தைகள், முதியவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை உருவாக்கப்பட்டு உள்ளது. இது தவிர, அவசர காலங்களில் பயன்படுத்த ஒரு வரிசையும் தயார்படுத்தப்பட்டு உள்ளது.  நடைப் பந்தலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் உணவு பாதுகாப்பு துறையின் சோதனையை கடுமையாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் தேவைப்படும் நேரங்களில் சுகாதாரத் துறை, கேரள காவல்துறை, தீயணைப்பு மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற தன்னார்வலர்களிடம் உதவி பெறலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நடைபாதைகளில்  பக்தர்களுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன.  பக்தர்கள் தரிசனம் முடித்து பாதுகாப்பாக ஊர் திரும்ப அனைத்து வசதிகளையும் செய்ய தீர்மானிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.