தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் கொல்லப்பட்டானா கேரள சிறுவன்? – குமரியில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

கேரள மாநிலம், விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்தவர் நிஜிபு. இவருடைய இரண்டாவது மகன் ஆதில் முகமது (12). இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஆதில் முகமதின் தாயார் சுஜிதாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை. ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் ஆதில் முகமது திட்டுவிளையிலுள்ள பாட்டி வீட்டுக்கு வந்து சில நாள்கள் தங்கி விட்டுச்செல்வது வழக்கம். கடந்த கோடை விடுமுறை சமயத்தில் தன்னுடைய தாயுடன் மே மாதம் ஆதில் முகமது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். மே மாதம் 6-ம் தேதி மதியம் வீட்டிலிருந்து வீட்டைவிட்டு வெளியேச்சென்ற ஆதில் முகமது வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பூதப்பாண்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், மே மாதம் 8-ம் தேதி திட்டுவிளை மணல்திட்டையில் உள்ள குளத்தில் மூழ்கிய நிலையில் ஆதில் முகமது சடலமாக மீட்கப்பட்டார். மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஜிதா பூதப்பாண்டி போலீஸில் புகார் கூறினார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளின் அடிப்படையில் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக பலகட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுவனின் பெற்றோர் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்திருந்தார். அதனடிப்படையில் தமிழக முதல்வரின் கவனத்துக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து 5 முறைக்கு மேல் போலீஸார் தடயங்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான விசாரணை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு கடந்த வாரம் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி போலீஸார் இப்போது விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். இதற்கிடையே தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தால் சிறுவன் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் கிளப்பியிருகின்றனர். இது குறித்து ஆதில் முகமதின் மாமா சுனில், “ஆதில் முகமது பள்ளி விடுமுறை காலங்களில் இங்கு வரும்போது எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மற்றொரு சிறுவனுடன் நட்பாக பழகி வந்தான். காணாமல்போன அன்று அந்த சிறுவனுடன் சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருக்கிறது. பின்னர் அந்த சிறுவன் தனியாக திரும்பி வந்ததும் கண்காணிப்பு கேமராவில் உள்ளது.

ஆதில் முகமதின் மாமா சுனில்

அந்த சிறுவனுக்கு தன்பாலின ஈர்ப்பாளருடன் தொடர்பு இருப்பது அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியும். என்னுடைய மருமகனின் உடல் குளத்திலிருந்து மீட்கப்பட்டபோது அவனது ஜீன்ஸ் பேன்ட் கால்வரை உருவப்பட்ட நிலையில் இருந்தது. அவன் அணிந்து சென்ற டீ சர்ட்டை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் என்னுடைய மருமகனுடன் சேர்ந்து அந்த சிறுவன் மொபைலில் கேம் விளையாடியிருக்கிறான். என் மருமகனின் மொபைல் போனிலும் அவனது ஐ.டி-யை பயன்படுத்தி கேம் விளையாடியிருக்கிறான். அந்த கேமை எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அழித்திருக்கின்றனர். இவை அனைத்தையும் கணக்கிட்டு பார்க்கும்போது என்னுடைய மருமகனை அந்த சிறுவன் குளத்துக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட்டுக் கொலைசெய்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என கருதுகிறோம்” என்றார்.

இந்த விவகாரத்தில், ஆதில் முகமது ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்ததாகவும், அவர் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்ததாகவும் கூறி ஆரம்பத்தில் போலீஸை திசை திருப்பியிருக்கிறான் அந்த சிறுவன். மேலும் ஆதில் முகமதை அழைத்துச் சென்றது 14 வயது சிறுவன் என்பதால் தங்கள் பாணியில் விசாரிக்க முடியாத நிலை போலீஸுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் போலீஸாரால் இந்த வழக்கை சரியாக கையாள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் குளக்கரையில் விளையாடச் சென்ற சமயத்தில் சிறுவன் குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்க வாய்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இப்போது வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் சென்றிருப்பதால் போலீஸ் அதிகாரிகள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.