புதுடெல்லி: ‘தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் போக்குடன் ஒன்றிய அரசு நடத்தவில்லை’ என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவையில் நேற்று கூறினார். கடற்கொள்ளையர்களை ஒடுக்குவதற்கான சிறப்பு விதிகளை உருவாக்கும் கடற்கொள்ளை தடுப்பு மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. இந்த மசோதா, கடற் கொள்ளையர்களுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதிக்க வழிவகை செய்கிறது. மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், குஜராத் மீனவர்களையும் நல்ல விதமாக நடத்தும் ஒன்றிய அரசு தமிழக மீனவர்களை பொறுத்தவரை பாரபட்சமாக நடத்துவதாகவும், மாற்றாந்தாய் மனப்போக்குடன் ஒன்றிய அரசு பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘தென் இந்தியா உள்ளிட்ட நாட்டின் அனைத்து மீனவர்களையும் ஒன்றிய அரசு சரிசமமாகவே பார்க்கிறது. இந்த விஷயத்தில் குஜராத் மீனவர்களுடன் ஒப்பிடுவதால், சில புள்ளிவிவரங்களை வெளியிடுகிறேன். கடந்த 2014ம் ஆண்டிலிருந்து தற்போது வரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 2,835 தமிழக மீனவர்கள் அந்நாட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் பாகிஸ்தான் சிறையில் இருந்து 2,165 குஜராத் மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 670 தமிழக மீனவர்கள் அதிகப்படியாக மீட்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக மீனவர்களை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கவில்லை.
மேலும், இலங்கை அதிபர், பிரதமர் உடனான பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு தடவையும் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து பேசப்படுகிறது. இதுதொடர்பாக இருநாட்டு மீனவர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பிலும் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக வேறு எந்த பிரதமர்களை காட்டிலும், தமிழக மீனவர்கள் பிரச்னையை மிகச்சரியாக கையாண்டிருப்பது பிரதமர் மோடி மட்டுமே’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ‘‘கச்சத்தீவு பிரச்னை இன்னும் தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. இதைப் பற்றி கேள்வி கேட்டால், ஒன்றிய அரசு, காங்கிரஸ் கட்சி மீது பழி போடுகிறது. ஆனால், கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது’’ என குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்து நிராகரிக்கப்பட்டு, கடற்கொள்ளை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
* வீரர்களை விமர்சிக்க கூடாது
இந்தியா, சீனா எல்லையில் வீரர்கள் மோதல் குறித்து பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘நமது ராணுவ வீரர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிக்கக் கூடாது. அவர்கள் தவாங்கின் யாங்கே பகுதியில் 13,000 அடி உயரத்தில் நின்று நமது எல்லையைக் காத்து வருகின்றனர். அவர்கள் மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் ’’ என்றார்.
* ராகுலுக்கு பதில்
டெல்லியில் நேற்று நடந்த இந்தியா- ஜப்பான் கூட்டு மாநாட்டில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ‘சீனாவுடனான எல்லை மோதலை அரசு சரியாக கையாளவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கூறியுள்ளார். ராகுல் சொல்லியா எல்லையில் 2020ல் சீன ராணுவ நடமாட்டம் அதிகமானதால், இவ்வளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால் இவ்வளவு ராணுவத்தை அங்கு நிறுத்தி வைத்திருப்போமா? எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தன்னிச்சையாக மாற்ற சீனாவை அனுமதிக்க மாட்டோம் என்றார்.