திருப்பத்தூர் தண்டபாணி கோயில் தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தண்டபாணி கோயில் தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்ட நிலையில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாற்ற இடம் கொடுத்த பின்பே தங்களது இடத்தை காலி செய்ய வேண்டும் என்று மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் மறியல் நடக்கும் நிலையில் பாதுகாப்புபாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் தண்டபாணி கோவில், சிவராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே அந்த பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் இடிப்பு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நடைபெற உள்ளதாக நேற்றைய தினம் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஜே.சி.பி. வாகனங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.