தென்காசி மாவட்டத்தில் 250 கிலோ குட்கா பறிமுதல் செய்த போலீசார் இரண்டு வாலிபர்களை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கிடமாக அரசு பள்ளி அருகே நின்றிருந்த காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன்(33) மற்றும் கொண்டலூரை சேர்ந்த வேல்முருகன் (27) என்பது தெரிய வந்தது. மேலும் நின்றிருந்த காரில் சோதனை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, இவர்களுடன் தொடர்புடைய பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.