நாமக்கல் மாவட்டத்தில் எலக்ட்ரீசியனை கொடூரமாக மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் தேவராஜ் (34). இவரது செல்போனுக்கு நேற்று எலக்ட்ரீசியன் வேலை இருக்கிறது உடனே புறப்பட்டு வருமாறு அழைப்பு வந்துள்ளது. இதனால் புறப்பட்டுச் சென்ற தேவராஜ் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஜெகதாம்பாள் நகர் அப்பூர்பாளையத்திலிருந்து கைலா பாளையம் செல்லும் சாலையில் வந்த போது, அவரை வழிமுறைத்த மர்ம நபர்கள் திடீரென தேவராஜை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடவே பின்தொடர்ந்த மர்ம நபர்கள் மீண்டும் பலமுறை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இரவு வெகு நேரமாகியும் தேவராஜ் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.
அப்பொழுது ஜெகதாம்பாள் நகரில் தேவராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.