புதுடெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்: நாட்டின் மக்கள்தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 7.2 சதவீதமாக உள்ளது. அவற்றில் பெரும்பாலான பாஸ்போர்ட்டுகள் கடந்த 10 ஆண்டுகளில் பெறப்பட்டவை. தற்போது டிசம்பர் 2-வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் இந்த எண்ணிக்கை 10 கோடியாகும்.
பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, அதை பெறுவதற்கு இருந்த கடுமையான விதிமுறைகள்தான் காரணம். தற்போது, பாஸ்போர்ட் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக நடப்பு 2022-ம் ஆண்டில் 6 நாட்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலை கடந்த 2015-ம் ஆண்டு 21 நாட்களாக இருந்தன. அதனால், பாஸ்போர்ட் பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2015 முதல் 2022 வரை புதிதாக 368 பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கேரளா, மகாராஷ்டிராவில் தான் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது. தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் அதிக மக்கள் தொகை கொண்டிருந்தாலும், அதிக பாஸ்போர்ட் பெற்ற மாநிலமாக கேரளாதான் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டை விட 2 மடங்கு மக்கள்தொகை உள்ள உ.பி.யில் 87.9 லட்சம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் வைத்துள்ளனர். இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.