'பிக் பாஸ்' – அடுத்த சீசனுக்கு 'பை பை' சொல்வாரா கமல்ஹாசன்?

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மீடியா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சியான 'பிக் பிரதர்' நிகழ்ச்சி, இந்தியாவில் ஹிந்தி டிவிக்களில் 'பிக் பாஸ்' என்ற பெயரில் முதன் முதலில் 2006ம் ஆண்டில் அறிமுகமானது. மூன்றாவது சீசனில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்க ஆரம்பித்த போது இந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தி வைத்தது. அதன்பின் சல்மான் கான் கடந்த பல சீசன்களாக தொகுத்து வழங்கி நிகழ்ச்சியை மேலும் பிரபலப்படுத்தினார்.

தமிழில் 2017ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் பிரபலத்துடன் ஆரம்பமானது. முதல் சீசனில் ஓவியா ஏற்படுத்திய பரபரப்பு அந்த நிகழ்ச்சியைப் பலரையும் பார்க்க வைத்தது. தொடர்ந்து கடந்த ஆறு சீசன்களாக கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக நிகழ்ச்சியைப் பார்ப்பதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்கள்.

கடந்த சீசனை விடவும் பாதியளவுதான் இந்த 6வது சீசனுக்கு ரேட்டிங் வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் ஆரம்பமான அதே வருடம்தான் தெலுங்கிலும் ஆரம்பமானது. அங்கு கடந்த சில சீசன்களாக நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அங்கும் ரேட்டிங் குறைவாகத்தான் உள்ளதாம்.

கடந்த ஞாயிறு டிசம்பர் 18ம் தேதியன்று தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. எல்வி ரேவந்த் என்ற போட்டியாளர் வெற்றி பெற்று 10 லட்ச ரூபாய் பரிசு, கார் மற்றும் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்றுள்ளார். நாகார்ஜுனா அடுத்த சீசனைத் தொகுத்து வழங்க அதிக ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. ஒரே மாதிரியாக நிகழ்ச்சி போய்க் கொண்டிருப்பதால் ரசிகர்களிடமும் சுவாரசியம் குறைந்துவிட்டது என்பதையும் நாகார்ஜுனா உணர்ந்துள்ளாராம். எனவே, அவர் இந்த சீசனுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழைப் பொறுத்தவரையிலும் அதே விதமான வரவேற்பு என்பதால் கமல்ஹாசன் இந்த சீசனுடன் முடித்துக் கொண்டு அடுத்த சீசனை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழில் தற்போது நடைபெற்று வரும் 6வது சீசன் இன்னும் ஒரு மாதம் நடக்க இருக்கிறது.

கமல்ஹாசன் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் அவர் சிறப்பாகத்தான் நடத்தி வருகிறார். ஆனால், ரேட்டிங் வராமல் போவதற்கு அவர் என்ன செய்ய முடியும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. இருப்பினும் பெரிய அளவில் ரேட்டிங் வராத ஒரு நிகழ்ச்சியை, என்னதான் பல கோடிகளில் சம்பளம் கொடுத்தாலும் கமல்ஹாசன் அதைச் செய்வாரா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் பல புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். 'இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் ஒரு படம்' என சினிமா பக்கம் பல வேலைகள் உள்ளன. மேலும், அரசியல் வேலைகளும் இருப்பதால் அடுத்த சீசனுக்கு அவர் நிச்சயம் 'பை பை' சொல்லிவிடுவார் என்று கிசுகிசுக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.