புதுடில்லி, போலி ஆவணங்கள் வாயிலாக, பணம் வாங்கி ‘விசா’ வழங்கி மோசடி செய்ததாக புதுடில்லியில் உள்ள பிரான்ஸ் துாதரகத்தின் இரண்டு முன்னாள் ஊழியர்களை, சி.பி.ஐ., கைது செய்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சின் துாதரகம் புதுடில்லியில் உள்ளது. விசா வழங்குவதில் மோசடி நடந்துள்ளதாகசி.பி.ஐ.,க்கு துாதரகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக வெளிநாட்டுக்கு குடிபெயரும் நோக்கத்துடன் இருப்போரிடம் பணம் வாங்கி மோசடி நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக துாதரகத்தின் முன்னாள் ஊழியர்களான ஷுபம் ஷோகின், ஆர்த்தி மண்டல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
இந்த விசா மோசடியில் மிகப் பெரிய கும்பலே ஈடுபட்டுள்ளது. இதில், பிரான்ஸ் துாதரகத்தில் பணியாற்றி வந்த ஷுபம் ஷோகின், ஆர்த்தி மண்டலும் அடங்குவர்.
குடும்பத்தின் வறுமை சூழ்நிலையால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க விரும்புவோரை இந்தக் கும்பல் தேர்ந்தெடுக்கும். அவர்களுக்கு போலி ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்.
குறிப்பாக ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதாக போலிக் கடிதத்தை தயாரித்துள்ளனர்.
இந்த விசா விண்ணப்பங்களை புதுடில்லியில் உள்ள பிரான்ஸ் துாதரகத்தில் விசா பிரிவில் பணியாற்றிய ஷுபம் ஷோகின், ஆர்த்தி மண்டல் பரிசீலித்து விசா வழங்கியுள்ளனர். இதற்காக இவர்கள் ஒரு விண்ணப்பத்துக்கு, ௫௦ ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர்.
இவர்கள் இந்தாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை, ௪௮௪ விசா கோப்புகளை பரிசீலித்துள்ளனர். அதில், ௬௪ கோப்புகள் தற்போது மாயமாகியுள்ளன. மோசடியாக விசா வழங்கிய உடன், அது தொடர்பான கோப்புகளை இவர்கள் அழித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசா மோசடி கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்