புதுடில்லி;உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய நீர்மூழ்கி கப்பல், ‘வாகிர்’ கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது, அடுத்த மாதத்தில் கடற்படையில் இணைய உள்ளது.
‘புராஜெக்ட் ௭௫’ என்ற திட்டத்தின்கீழ், நம் கடற்படைக்கு ஆறு ‘ஸ்கார்பியன்’ ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஐந்தாவது நீர்மூழ்கி கப்பலான வாகிர், 2020 நவ.,12ல் தயாரானது.இதன்பின் கடலில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது, அனைத்து பரிசோதனைகளும் முடிந்துள்ளன.
இந்த நீர்மூழ்கி கப்பல், அடுத்த மாதத்தில் முறைப்படி கடற்படையில் இணைய உள்ளது. இந்நிலையில் இது கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த நீர்மூழ்கி கப்பல், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, ‘மாஜேகான்’ கப்பல் கட்டும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மாத்வால் கூறியதாவது:
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவில் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. சமீபத்தில், ‘ஐ.என்.எஸ்., மார்முகோவா’ என்ற பிரமாண்ட போர்க் கப்பல் கடற்படையில் இணைந்தது.
தற்போது இந்த நீர்மூழ்கி கப்பல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது நம் கடற்படைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த நீர்மூழ்கி கப்பல், சுயசார்பு இந்தியா என்ற கோஷத்துக்கு ஏற்ப, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement