மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் புகைப்பட கண்காட்சி சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியினை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மறைந்த அன்பழகனின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் அன்பழகனின் இரண்டாவது மனைவி சாந்தகுமாரியின் புகைப்படம் இடம்பெறவில்லை என அவரது பேத்தி கயல்விழி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் “என் தாத்தா அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சி நடக்கிறது. நானும் எனது அக்கா கனிமொழியும் கண்கான்சியை காணச் சென்றோம். எல்லாம் நன்றாக இருந்தது, ஆனால் ஒரு வருத்தம் மேலோங்கி இருக்கிறது. என் தாத்தா அன்பழகன் உடன் 60 ஆண்டுகளுக்கு மேல் மனைவியாக வாழ்ந்த என் பாட்டி மருத்துவர் சாந்தகுமாரியின் படம் ஒன்று கூட அங்கு இல்லை.
அவருடைய முதல் மனைவி இறந்த பின் என் பாட்டியை மணந்தார். இருவரும் 60 ஆண்டுகளுக்கு மேல் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்துள்ளனர். அவ்வாறு இருக்கும் பொழுது என் பாட்டியை மட்டும் புறக்கணிக்க அவசியம் என்ன? அவரது இரண்டாவது மனைவி என்பதாலா.? அவர்களின் வாரிசுகள் நாங்கள், திமுகவில் எந்த பதவிக்கும் பங்கு கேட்கவில்லை, தேவையும் இல்லை” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.