சென்னை: பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிட உள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது ரொக்கம் மற்றும் பொருட்கள், அல்லது ரொக்கம் என தொடர்ந்து அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ரொக்கம் வழங்கப்படவில்லை. இதற்கிடையே, வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விமர்சிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், வரும் 2023-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு, வழக்கமான அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை மற்றும் கரும்புடன், பொருட்களுக்குப் பதில் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாயை வங்கிக்கணக்கில் வழங்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டு, வங்கிக்கணக்கு விவரங்களை பெறும் பணிகளும் நடைபெற்றன.
இதற்கிடையே, 2.23 கோடி குடும்ப அட்டைகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 அட்டைகளின் வங்கிக்கணக்கு, ஆதார் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட் டது. இதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், மூத்த அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தலைமைச் செயலர், துறை செயலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்தை நேரில் வழங்குவதுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேவையான நிதி, பொருட்கள் இருப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை சில தினங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும், ஜனவரி முதல் வாரத்தில் திட்டம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொங்கல் பரிசு தொகுப்பில் நெய்?: கடந்த பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்பட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பில் 100 மி.லி. ஆவின் நெய் இடம்பெற்றது. அதேபோன்ற பரிசுத் தொகுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக நெய் தயாரித்து வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக அதிகாரிகள்கூறும்போது, ‘‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆவின் நெய் தயாரித்து வழங்குவது தொடர்பாக இதுவரை ஆர்டர் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அதேநேரம், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு வழங்க, எங்களிடம் போதுமான அளவுக்கு ஆவின் நெய் தயாராக இருக்கிறது’’ என்றனர்.