புதுடெல்லி: ‘நாட்டுக்காக பாஜ என்ன செய்தது?’ என கேள்வி கேட்ட காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டித்து, நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். ராஜஸ்தானின் ஆல்வாரில் நேற்று முன்தினம் நடந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அப்போது, ராகுல் முன்னிலையில் அவர் பேசுகையில், ‘‘இந்த தேசத்திற்காக காங்கிரஸ் கட்சி பல தலைவர்களை இழந்துள்ளது. ஆனால் பாஜவினர் அவர்கள் வீட்டில் வளர்க்கும் ஒரு நாயை கூட இழந்ததில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்களை தேசபக்தர்கள் என்றும், எங்களை தேச விரோதிகள் என்றும் கூறுகின்றனர். சீன எல்லை விவகாரத்தில் வெளியில் சிங்கம் போல் பேசும் பாஜ அரசு, செயலில் எலியை போல் நடந்து கொள்கிறது’’ என கடுமையாக குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநிலங்களவை காலையில் கூடியதும், கார்கே தனது பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜ எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பலமுறை கூறியும், அவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்று கோஷமிட்டபடி இருந்தனர். அப்போது பேசிய அவையின் ஆளுங்கட்சி தலைவரான பியூஸ் கோயல், ‘‘மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கள், புண்படுத்தும் வார்த்தைகளை அவர் பயன்படுத்திய விதம், பொய்யைப் பரப்ப முயன்ற விதம் ஆகியவற்றை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இதற்காக அவர் இந்த அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசை கலைக்க வேண்டுமென மகாத்மா காந்தி கூறினார். அவர் ஏன் கூறினார் என்பதற்கு வாழும் சாட்சி கார்கே. கட்சியின் தேசிய தலைவரான அவரே இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது, அக்கட்சியின் தோல்வி விரக்தியை காட்டுகிறது’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியபோது பாஜ, காங்கிரஸ் எம்பிக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர், ‘‘இந்த கருத்து அவைக்கு வெளியில் பேசப்பட்டது. இதற்காக விதிமுறைக்கு எதிராக அவையில் நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது.
உங்களைப் பார்த்து 130 கோடி மக்களும் சிரிப்பார்கள். நீங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை’’ என்று ஆளுங்கட்சியினரை கடிந்து கொண்டு, கார்கேவை பேச அனுமதித்தார். அப்போது பேசிய கார்கே, ‘‘நான் அவையில் பேசாத ஒரு விஷயத்தை பற்றி இங்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. நான் வெளியில் கூறியதை மீண்டும் இங்கு கூறினால் அவர்களுக்கு (பாஜ எம்பிக்கள்) தான் சங்கடமாக இருக்கும். சுதந்திர போராட்டத்தின் போது மன்னிப்பு கேட்டவர்கள்,
சுதந்திரத்திற்காக போராடியவர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள். இந்த நாட்டிற்காக இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி தங்கள் உயிரை கொடுத்தனர்.
நாட்டின் சுதந்திரத்திற்காகவும், நாட்டிற்காகவும் எதை நீங்கள் தியாகம் செய்தீர்கள்? உங்கள் தரப்பிலிருந்து யார் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்?’’ என பேசியதோடு மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்தார். இந்த விவாதத்தால் மாநிலங்களவையில் பரபரப்பான சூழல் நிலவியது. இதே போல, மக்களவை காலையில் கூடியதும் இதே விவகாரத்தை கிளப்பி பாஜ எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை காலை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அங்கும் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இடையே காரசார வாதம் நடந்தது.
* எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் நேற்று பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தோலா சென், ‘‘மனித உரிமைகள் ஆணையம் பீகாருக்கு செல்கிறது, மேற்கு வங்கத்திற்கு செல்கிறது, ஆனால் உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற பாஜ ஆளும் மாநிலங்களை மட்டும் தவிர்க்கிறது. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்’’ என அவையிலிருந்து வெளியேறினார். இதே விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
* கூட்டத்தொடர் முன்கூட்டி முடிகிறது?
நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கிடையே, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டுமென பல எம்பிக்களும் வலியுறுத்தி இருந்தனர். இதுதொடர்பாக மக்களவை அலுவல் ஆலோசனைக்குழுவும் அரசுக்கு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக, கூட்டத்தொடர் ஒரு வாரத்திற்கு முன்பாக, நாளை மறுதினத்துடன் முன்கூட்டியே கூட்டம் முடிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
* கூடுதல் செலவுக்கு ரூ.3 லட்சம் கோடியா?
ரூ.3.25 லட்சம் கோடிக்கான துணை மானிய கோரிக்கை மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதன் மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடந்தது. அப்போது, கூடுதல் செலவுக்கு ரூ.3.25 லட்சம் கோடி செலழிக்க ஒன்றிய அரசுக்கு அங்கீகாரம் அளித்திருப்பதற்கு எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி எம்பிக்கள் பேசுகையில், ‘பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துணை மானிய கோரிக்கையாக இவ்வளவு பெரிய தொகையை கேட்பதா? திட்டமிடுவதில் இவ்வளவு தவறு எப்படி வந்தது என்பதுதான் எழும் முக்கிய கேள்வி? இது தவறான கணக்கீட்டைக் குறிக்கிறது. பட்ஜெட் தயாரிப்பதில் கவனம் இல்லாததால் இது நடந்திருக்கலாம்’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
* கூட்டு குழு அமைப்பு
நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. இதன்படி, மக்களவையிலிருந்து 21 எம்பிக்கள், மாநிலங்களவையில் இருந்து 10 எம்பிக்கள் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் நேற்று தகவல் தெரிவித்தார். இந்த குழு தனது அறிக்கையை பட்ஜெட் 2ம் கட்ட கூட்டத் தொடரில் (பொதுவாக மார்ச் மாதம் தொடங்கும்) மக்களவையில் சமர்பிக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
* இது இத்தாலி காங்கிரஸ்
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியத்தை எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு. இது அசல் காங்கிரஸ் அல்ல. அசல் காங்கிரசில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், சர்தார் படேல் போன்ற தலைவர்களை அது எப்படி நடத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது வேறு சிலரின் தலைமையிலான இத்தாலிய காங்கிரஸ். எதிர்க்கட்சியின் நீண்ட கால தலைவராக இருந்தவர் சோனியா காந்தி இது போலி தலைவர்கள் நிறைந்த போலி காங்கிரஸ். தற்போதைய காங்கிரஸ் தலைவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்’ என்று தெரிவித்தார்.