மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் அமளி!

“தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கறாராகத் தெரிவித்து உள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும், இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றினார்.

அப்போது, அருணாச்சலப் பிரதேச எல்லையில் சமீபத்தில் நடந்த இந்தியா – சீனா மோதல் குறித்து பாஜகவை கடுமையாக அவர் விமர்சித்தார். மேலும் அவர் பேசியதாவது:

காங்கிரஸ் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி உயிரை தியாகம் செய்தனர். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். பாஜக எதையும் இழக்கவில்லை. உங்கள் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? இருப்பினும், அவர்கள் தங்களை தேச பக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் எங்களை தேச விரோதிகள் என அழைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாஜகவை தாக்கி பேசும் போது நாய் என்ற வார்த்தையை மல்லிகார்ஜூன கார்கே பயன்படுத்தியதால் பாஜகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மல்லிகார்ஜூன கார்கே கூறிய கருத்திற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் தரப்பில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

நாகரிகமற்ற வகையில் மனதை புண்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதற்காக பாஜகவிடமும், நாடாளுமன்றத்திடமும், நாட்டு மக்களிடமும் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநிலங்களவையில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார். இந்த விவகாரம் காரணமாக அவையில் கூச்சல் – குழப்பம் ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர், “இந்த கருத்து நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறப்பட்டது. நாட்டின் 135 கோடி மக்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் யாரோ எதையோ பேசி இருக்கலாம். நீங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை,” எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த மல்லிகார்ஜூன கார்கே, “நாடாளுமன்றத்திற்கு வெளியே ராஜஸ்தானின் அல்வாரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது தான் நான் பேசினேன். அரசியல் ரீதியாக நான் பேசியது அவைக்கு வெளியே தான். இதற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. எனவே அது பற்றி இங்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை,” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.