புதுடெல்லி: யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது: யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து அவைகள் வாழ்வதற்கேற்ற சுற்றுச்சூழல் அமைப்பு சீரழிந்து வரும் நிலையில் அதனை ஈடு செய்ய நாம் என்ன செய்யப் போகிறோம்? நாடெங்கிலும் மனிதர்கள் மற்றும் வேட்டைக்காரர்களின் சுயநலத்தினாலும், ரயில் விபத்துக்களாலும், யானையின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பாலும் யானைகள் உயிரிழப்பு தொடர்ந்து நடக்கிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில், முதலில் சட்டவிரோதமாக யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்தும், பிறகு ஒன்றிய அரசின் உதவியோடு அதனை சட்டப்பூர்வமாக மாற்றி, அங்கே இப்போது அதிக ஒலியுடன் கூடிய இசையும் ஒலிக்கப்படுகிறது. யானைகள் கூட்டமாக இரயில் பாதையை கடக்கும்போது விபத்துகளில் சிக்கி பல யானைகள் பலியாகின்றன. எனவே யானைகள் பாதையை கடக்கும் இடங்களில் அவைகள் பாதிக்காத வகையில் உயர்மட்ட இரயில் பாதைகள் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?
ஒன்றிய அரசு, குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பவர்களை, அதிலும் எங்கள் தமிழ்நாட்டில் உள்ள வெள்ளியங்கிரி மலையில், சட்டவிரோதமாக மிகப்பெரிய கட்டுமானங்களை கட்டி ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் தாமதித்து வருகிறது? மேலும் அவர்கள் அந்த காட்டுக்குள் அதீத ஒலியுடன் கூடிய பாடலை, இசையை இசைத்து வன உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யானைகள் மற்றும் காடுகள் பராமரிப்பில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். மாறாக உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக விதிகளை திருத்தக் கூடாது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும். இவ்வாறு தயாநிதி மாறன் எம்.பி பேசினார்.