புதுடெல்லி: மெகுல் சோக்ஷி, ஹெம் சிங் பரானா, ஜதின் மேத்தா உள்பட 50 தொழிலதிபர்கள் மட்டும், மொத்தம் ரூ.92,570 கோடி கடன் மோசடி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. சாமானிய மக்கள் வங்கிக் கடன் வாங்க தவியாய் தவிக்கும் நிலையில், மிக எளிதாக கடன் வாங்கி, அவற்றை ஏமாற்றி மோசடி செய்யும் தொழிலதிபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி கடன்கள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அதிகமாக கடன் மோசடி செய்த 50 தொழிலதிபர்கள் மட்டும், கடனை திருப்பி செலுத்தாமல் ரூ.92,570 கோடி மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை, ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராத், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 31ம் தேதிப்படி, இந்த மோசடி தொழிலதிபர்களில் முதலிடத்தில் இருப்பது, மெகுல் சோக்ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம்தான். இந்த நிறுவனம் ரூ.7,848 கோடி மோசடி செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஹெம் சிங் பரானாவின் எரா இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.5,879 கோடி மோசடி செய்துள்ளது. அடுத்த இடங்களில், ரெய் அக்ரோ (சந்தீப் மற்றும் சஞ்சய் ஜூன்ஜூன்வாலா சகோதரர்கள்) ரூ.4,803 கோடி, கான்காஸ்ட் ஸ்டீல் பவர் ரூ.4,596 கோடி, ஏபிஜி ஷிப் யார்டு (ரிஷி அகர்வால்)ரூ.3,708 கோடி, ஃப்ராஸ்ட் இன்டர்நேஷனல் ரூ.3,311 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் (ஜதின் மேத்தா) ரூ.2,931 கோடி,
ரோட்டோமேக் குளோபல் (விக்ரம் கோத்தாரி) ரூ.2,893 கோடி, கோஸ்டல் பிராஜக்ட்ஸ் ரூ.2,311 கோடி, ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.2,147 கோடி மோசடி செய்துள்ளனர்.இவர்கள் உட்பட அதிக கடன் மோசடி செய்த டாப் 50 பேர் மட்டும் மொத்தம் ரூ.92,570 கோடி வங்கிக் கடன் மோசடி செய்துள்ளனர். இவர்கள், கடன் செலுத்துவதற்கான நிதி நிலை, தகுதி இருந்தும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர் என்றும், ரிசர்வ் வங்கி விதிகளின்படி இவர்கள் 5 ஆண்டுகளுக்கு புதிதாக கடன் வாங்க முடியாது எனவும் கராத் தெரிவித்தார்.
கடன் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடிய நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா ஆகியோரின் சொத்துக்களை முடக்க ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டேதான் வருகிறது. இதை அவர்களிடம் வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால் ஒரு சில வழக்குகளைத் தவிர, இந்த மோசடிக்கு துணைபோன வங்கி உயர் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் விவசாயிகள் கடன் வாங்கினால், மொத்தமாக வசூலிப்பதோடு அவர்களது சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் வங்கிகள், இவ்வளவு பெரிய கடனை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. கடன் கொடுக்கும்போதும் அவர்களால் திருப்பிச் செலுத்த வாய்ப்பு உள்ளதா என்றும் கவனிக்காமல், தங்கள் தேவைகளுக்காக தொழில் அதிபர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
312 பேர் ரூ.1.41 லட்சம் கோடி அதிக கடன் மோசடி செய்துள்ள 50 கடன் மோசடியாளர்கள் ரூ.92,570 கோடி மோசடி செய்துள்ள நிலையில், இந்த டாப் மோசடியாளர்கள் பட்டியலில் 312 பேர் மட்டும் ரூ.1.41 லட்சம்கோடி பாக்கி வைத்துள்ளனர் என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.