ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸும், மீண்டும் பிடிக்க பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவுகிறது. முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே பனிப்போர் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணம் நேற்று முன்தினம் 100-வது நாளை எட்டியது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா நகரில் நடைபெற்ற இந்த பயணத்தின்போது, முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் பங்கேற்றனர். அப்போது, ‘சச்சின் பைலட் வாழ்க’ என சிலர் கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடைபயணத்தை தொடர்ந்த ராகுல் காந்தியுடன், கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அசோக் கெலாட், கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் டோட்ஸ்ரா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் இருந்தனர். ஆல்வார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அசோக் கெலாட் அரசின் சாதனைகளைப் பாராட்டினார்.
இந்தக் கூட்டத்தில் ராகுல் முன்னிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது: அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக தற்போது ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பை இலவசமாக வழங்கினார். ஆனால், அவர்களுடைய சிலிண்டர் இப்போது காலியாக உள்ளது. சிலிண்டர் விலை ரூ.400-லிருந்து ரூ.1,040-ஆக உயர்ந்து விட்டதே இதற்குக் காரணம்.
எனவே, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும். இந்த விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.