பெங்களூரு: கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை நடப்பு குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டு வர பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து அமைப்பினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனிடையே கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்க்கு, பாஜக எம்எல்சி ரவிக்குமார் அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் சான்றளிக்கும் உணவை தவிர வேறு எந்த அமைப்பும் சான்றளிக்கும் உணவையும் விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். மதத்தை முன்வைத்து உருவாக்கப்படும் ஹலால் உணவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுபற்றி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அப்போது ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்கும் மசோதாவை, நடைபெற்று கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக எம்எல்சி ரவிக்குமார், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஹலால் மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்தால் அதனை எதிர்க்க போவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. வாக்காளர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் முயற்சி என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.