திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன், கோபிநாத் என்பவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் “தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடைகளும் அதனை ஒட்டி உள்ள பார்களும் இரவு 10:00 மணிக்கு மூடப்படுவதால் மது அருந்துபவர்கள் டாஸ்மார்க் கடைக்கு முன்பும், பார்கள் அருகிலும், பொது இடங்களிலும் மது அருந்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
பொது இடங்களில் மது அருந்துபவர்கள் கண்ணாடி பாட்டில்களை பொது இடங்களிலும் தண்ணீர் செல்லும் கால்வாய்களிலும் வீசி விட்டு செல்கின்றனர். அதேபோன்று நள்ளிரவு நேரங்களில் குற்ற செயல்களும் அரங்கேறுகின்றன. இதன் காரணமாக கடந்த 2003ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுபான சில்லறை விற்பனை விதியின்படி மதுபான கடை இயங்கும் நேரத்தை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மாற்றி அமைக்கும்படி தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்பதால் மது அருந்துவதை முறைப்படுத்த வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு இந்த மனு மீது பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் டாஸ்மார்க் நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.