புதுடெல்லி: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி: அதன் விவரங்கள் பின்வருமாறு: கொரோனா பெருந்தொற்றினால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அப்பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதா என்பது குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வறிக்கை தயாரித்துள்ளதா என்றும் அவ்வாறெனில் அதன் வளர்ச்சி விகிதத்துடன் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் வளர்ச்சியை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? கடந்த ஏழு ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வறிக்கை தயாரித்துள்ளதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்? குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் வளர்ச்சியை மேம்படுத்த, நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய கூட்டங்களின் மூலம் பெறப்பட்ட பரிந்துரைகள் என்னென்ன? குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு வழங்கப்படும் கடன் மற்றும் ஒதுக்கப்படும் நிதியை உயர்த்த அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ? வங்கிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையினர் கடன் பெறுவதற்கு தேவையாக உள்ள வங்கி கடன் மதிப்பீடு முறையை ரத்து செய்ய ஒன்றிய அரசு முன்மொழிகிறதா? இவ்வாறு தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.