புதுடெல்லி: ‘கொரோனா விதிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை செய்யுங்கள்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் மூலமாக வலியுறுத்தி இருக்கிறார்.
உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநிலங்களுக்கு சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த எம்பிக்கள் பிபி சவுத்ரி, நிஹால்சந்த் மற்றும் தேவ்ஜி படேல் ஆகியோர் சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘காங்கிரஸ் எம்பி ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்பவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்டவை கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே இதில் அனுமதிக்கப்பட வேண்டும், ” என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த கடிதத்தை மேற்கோள்காட்டி அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில்,‘‘இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள். அவ்வாறு முடியாவிட்டால், தேசிய நலனுக்காக நடைபயணத்தை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை செய்யுங்கள்”என்று குறிப்பிட்டுள்ளார்.