சிரித்தால், அழுதால் அவ்வளவு தான் உயிர் போச்சு – வடகொரியா அதிபர் போட்ட அதிரடி உத்தரவு

சியோல்,

வடகொரியா இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக திகழ்கிறது. அந்த விதத்தில் அங்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாது. கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. விசித்திரமான சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ளன. வடகொரியாவின் தற்போதைய அதிபராக கிம் ஜாங்-வுன் உள்ளார். அவரது கண் அசைவை மீறி அங்கு ஒரு எறும்பு கூட சுதந்திரமாக செயல்பட முடியாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் தண்டனைகளும் அமலில் உள்ளன.

இந்தநிலையில், வடகொரிய நாட்டில் வசிக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங்-இல்லின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, டிசம்பர் 17ஆம் தேதி முதல் 11 நாள்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, இந்த 11 நாள்களுக்கும் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகாலமாக துக்க நாள்களில் இந்த தடை உத்தரவு அமலில் இருப்பது பலரும் அறிந்ததே.அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, 11 நாள்களுக்குப் பிறகே அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் மிகக் கொடுமையான தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.