டெல்லி: சீனாவை அச்சுறுத்தும் பி.எஃப்.7ஒமைக்ரான் வைரஸ் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
2019 இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி, உலக நாடுகளை அச்சுறுத்தின. எனினும், கடந்த ஓராண்டாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவல் குறைந்து, படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சீனாவில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டில் ஒமைக்ரான் பி.எஃப்.7 என்ற வகை வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. சீனாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 3,101 பேருக்கு அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது. அதற்கு முந்தைய நாளில் 2,722 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இப்போதைக்கு சீன மெயின்லான்டில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 276 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவிலும் கரோனா தொற்று பரவி விட கூடாது என்று மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதேநேரம், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, சீனாவில் தற்போது கரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பி.எஃப்.7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மற்றும் ஒடிஷாவில் தலா இரண்டு பேர் பி.எஃப்.7 ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூலை மாதம் பி.எஃப்.7 திரிபின் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்பின் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வெகுவாக கொண்டாடப்பட்ட போதிலும் கவலை அளிக்கும் வகையில் கரோனா பாதிப்புகள் இந்தியாவில் உயரவில்லை. இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், சீனாவில் அதிவேகமாக இந்த திரிபு பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகளில் இந்த திரிபு ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.