சுமார் 3.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட,தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வலைப்பந்தாட்ட மைதானம் நேற்று (20) பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனால் திறக்கப்பட்டது.
நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட 5 மைதானங்களில் இதுவும் ஒன்றாகும்.
யாழ் மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, உடுப்பிட்டி மகளீர் கல்லூரி, வரணி மத்திய கல்லூரி, புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகிய 05 பாடசாலை விளையாட்டு மைதானங்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டன.
90களில் வலைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய இப்பாடசாலையானது, தற்போது வலைப்பந்தாட்ட மைதானமின்மையால் சவால்களை சந்தித்துவரும் நிலையில், மீண்டும் இவ்விளையாட்டில் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்களின் பெருவிருப்பத்துக்கமைய இந்த புதிய வலைப்பந்தாட்ட மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் விளையாட்டுத்துறையில் தேசிய சாதனைகளை படைத்துவரும் இக்கல்லூரி இன்னும்பல சாதனைகளை படைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு என்று பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாத இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.
Logini Sakayaraja