பனிக்காலத்தில் நோயடிக்கும் காய்கள்: உச்சம் தொடும் முருங்கைக்காய் விலை

நெல்லை: பனிக்காலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முருங்கை விலை உச்சத்தை தொட்டுள்ளது. பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில் கிலோ ரூ.130க்கு விற்பதால் பொதுமக்கள் முருங்கை காய்களை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்களில் முருங்கைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சாம்பார், வத்த குழம்பு உள்ளிட்ட சைவ சமையல்களிலும் ெபரும்பாலும் முருங்கைக்காய் இடம் பெறும். விலை மலிவான காலத்தில் முருங்கைக்காய்களை கூட்டு வைத்து சாப்பிடுவோரும் அதிகம். இந்நிலையில் சமீபகாலமாக முருங்கையின் விலை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மார்க்கெட்டில் ஏறுமுனையில் உள்ளது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.80 ஆக இருந்த முருங்கை விலை நேற்று ரூ.130 ஆக உயர்ந்தது. உழவர்சந்தையில் இத்தகைய விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில், உள்ளூர் கடைகளில் முருங்கைக்காய் கேட்டால் கை விரிக்கின்றனர்.

சில கடைகளில் ஒரு காய் மட்டுமே ரூ.10 அல்லது ரூ.12க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டவுன் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘‘பனிக்காலம் என்பதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து பிற மார்க்கெட்டுகளுக்கு முருங்கைக்காய் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. உள்ளூர் வரத்தும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இப்போது குறைவு. குறிப்பாக உடன்குடி, சாத்தான்குளம், இட்டமொழி சுற்றுவட்டாரங்களில் இருந்து முருங்கைக்காய்கள் முன்பு மூடை, மூடையமாக மார்க்கெட்டிற்கு வரும். தேரிக்காடுகளில் காணப்படும் பல முருங்கை மரங்கள் வாடிய நிலையில் உள்ளன. முருங்கைக்காய்களும் நோய் அடித்து பழுப்பு நிறத்தில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தை பொங்கல் முடிய முருங்கை வரத்து குறைவாகவே இருக்கும். அதன்பின்னர் முருங்கை விளைச்சல் அதிகரித்தால், விலை குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.