பற்ற வைத்த பண்ருட்டி..பதற்றத்தில் எடப்பாடி; அதிமுக பர..பர..!

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக கட்சியை வழிநடத்துவது யார்? என்பதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனால் டென்ஷன் ஆன

அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு ஆகியவை செல்லாது என, உத்தரவு பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதி மன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். கூடவே, எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டியாக தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமித்து வருகிறார்.

இதுவரை 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளையும் அடுத்தடுத்து நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கிலியை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அதிமுக (ஓபிஎஸ் ஆதரவு) ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என 200 பேர் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும். நாடாளுமன்றத்தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.

தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும். தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட வரவு செலவு கணக்கானது நான் பொருளாளராக இருந்தபோது கொடுத்தது.

பொதுக்குழு முறையாக நடக்கும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இறுதி வெற்றி எங்களுக்கு தான். இணைய கூடாது என்ற எண்ணம் எடப்பாடிக்கு மட்டும் தான் உள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:

வரலாற்று சிறப்பு மிக்க இந்த அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தாங்கும் வாய்ப்பினை எனக்கு அளித்ததுக்கு நன்றி. எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடி இருக்கிறோம்.

இங்கு உள்ளவர்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசி உண்டு என்பதை அதிகாரப்பூர்வமாக கூறுகிறேன். நமது சமுதாய கட்டமைப்பில் உழைப்போர் தாழ்ந்தோராக இருப்பார்.

ஆனால் எம்ஜிஆர் கையெழுத்து போட்டால் உழைப்போரே உயர்ந்தவர் என, எழுதித் தான் கையெழுத்து போடுவார். எனவே உழைப்போரை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக.

கவிதையில் இடைச்செருகல்களை கற்றறிந்த புலவர்கள் அகற்றுவார்கள். அதேப் போல், அதிமுக எனும் இந்த மாபெரும் இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

மூத்த தலைவராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்து அனுபவம் பெற்றவர். அத்துடன் தமிழக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்களில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒருவர்.

அப்படி இருக்கையில் இதுநாள் வரை அமைதி காத்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது அதிமுகவில் உள்ள இடை செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதே சமயம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.