பழநி: பழநி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா ஜன.29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப்.4ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள பிரசித்தி பெற்ற பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா, வரும் ஜன.29ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் வள்ளி – தெய்வானை சமேதரராய், முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீ திகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்.3ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது.
இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் வள்ளி – தெய்வானை சமேதரராக, முத்துக்குமாரசுவாமி ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் வரும் பிப்.4ம் தேதி நடக்கிறது. வழக்கமாக தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை, பொங்கல் பண்டிகை விடுமுறை, தைப்பூச திருவிழா காலம் என 3 பிரிவுகளாக நடந்து வருவது வழக்கம். இந்தாண்டு தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகளவு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிசம்பர் மாத இறுதியில் இருந்தே போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.