சென்னை: கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் 2021-22 நிதியாண்டுக்கான வரவு-செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே பிரிவு ஏற்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பொதுக்குழுவை கூட்டி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கினார். ஓபிஎஸ்-சின் கட்சி பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் ஜன.4-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.
ஒவ்வொரு கட்சியும் ஆண்டு செலவு கணக்கை இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு கடந்த அக்டோபர் மாதம் 2021-22 நிதியாண்டுக்கான அதிமுகவின் வரவு- செலவு கணக்கை பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என தனது பதவியை குறிப்பிட்டிருந்தார். இந்த வரவு- செலவு கணக்கை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், அதுதொடர்பான விவரங்களை, அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்ட வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றதால், அவரது பதவியையும் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக பழனிசாமி தரப்பினர் கூறிவருகின்றனர்.
இதுதொடர்பாக ஓபிஎஸ்-சிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் தயாரித்த வரவு செலவு கணக்கைதான் அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். கட்சியும், சின்னமும் எங்களிடம்தான் வரும்” என்றார்.